மடிகேரி அருகே தனியார் ரெசார்டு அமைக்க வனப்பகுதியில் 890 மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி சமூக ஆர்வலர்கள், மக்கள் கடும் எதிர்ப்பு


மடிகேரி அருகே தனியார் ரெசார்டு அமைக்க வனப்பகுதியில் 890 மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி சமூக ஆர்வலர்கள், மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:00 AM IST (Updated: 9 Jun 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

மடிகேரி அருகே தனியார் ரெசார்டு அமைக்க வனப்பகுதியில் 890 மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடகு,

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் கர்நாடக மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா தலமாக குடகு மாவட்டம் விளங்குகிறது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குடகில் ஏராளமான ரெசார்டுகள், ஓட்டல்கள் உள்ளன. இதில் அனுமதி பெறாமல் ஏராளமான ரெசார்டுகள் கட்டப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளின் வருகையும், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், புதிது, புதிதாக ஓட்டல்கள், ரெசார்டுகள் வருகின்றன.

890 மரங்களை வெட்ட அனுமதி

இந்த நிலையில் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கே.நெடுகனே கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 68 ஏக்கர் நிலத்தில் ரெசார்டு கட்ட ஆந்திராவை சேர்ந்த ஒருவர் முடிவு செய்துள்ளார். இதற்கு வனத்துறையினரும் அனுமதி அளித்துள்ளனர். அத்துடன், இந்த ரெசார்டு கட்டுவதற்காக வனப்பகுதியில் உள்ள 890 மரங்களை வெட்டவும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மரங்களை வெட்டும் பணியும் தொடங்கி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் வனத்துறை கொடுத்த அனுமதியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குடகில் உள்ள மரங்களால் தான் மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. தற்போது புதிது, புதிதாக வரும் ஓட்டல்கள், ரெசார்டுகளால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது.

இதனால் குடகின் தட்பவெட்ப நிலை மாறி வருகிறது. தற்போது தனியார் ரெசார்டு அமைக்க சுமார் 900 மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி கொடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மரங்கள் வெட்டப்பட்டால் குடகு மாவட்டத்தின் தட்பவெட்ப நிலை முழுவதும் மாறி, மழை பெய்யாமல் இருக்கக்கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தனியார் ரெசார்டு கட்ட மரங்களை வெட்டும் முடிவை வனத்துறை கைவிட வேண்டும் என்றனர்.

Next Story