கன்றுகுட்டி மீது மோதியதில் ஜீப் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


கன்றுகுட்டி மீது மோதியதில் ஜீப் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Jun 2019 3:30 AM IST (Updated: 9 Jun 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில், கன்றுகுட்டி மீது ஜீப் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் மற்றும் பெண் தொழிலாளர்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம் பாரஸ்ட் தெருவை சேர்ந்த 14 பெண்கள் கேரள மாநிலம் நெடுங்கண்டம் அடுத்த ஈட்டித்தோப்பு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்ட வேலைக்கு நேற்று காலை ஜீப்பில் சென்றனர். பின்னர் அவர்கள் வேலை முடிந்து மாலையில் கம்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை கம்பம் சுப்பிரமணியகோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்(வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.கம்பம் நூர்பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையில் ஒரு கன்றுகுட்டி திடீரென குறுக்கே வந்தது. இதில் கன்றுகுட்டி மீது ஜீப் மோதி கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கன்றுகுட்டி பரிதாபமாக இறந்தது. மேலும் ஜீப் டிரைவர் ரஞ்சித் மற்றும் அதில் சென்ற பெண்களான ராஜேஸ்வரி (58), நாகலட்சுமி (35), மீனாட்சி (48), சரோஜா(43), தமிழரசி (35) ஆகியோர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக ஜீப் கம்பம் நோக்கி வரும் போது, மலை அடிவாரத்தில் அதிவேகமாக வந்ததாகவும், கூடுதலாக ஆட்களை ஏற்றி வந்ததாகவும் கம்பம் வடக்கு போலீசார் அபராதம் விதித்து இருந்தனர். அங்கிருந்து கிளம்பிய 5-வது நிமிடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story