மாட்டு வண்டிகளுடன் வந்து தரிகெரே தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் நூதன போராட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு நடந்தது
மாட்டு வண்டிகளுடன் வந்து, தரிகெரே தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அடிப்படை வசதிகள் கேட்டு நடந்தது.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே அருகே லிங்கதஹள்ளி, மல்லேனஹள்ளி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்த கிராமத்திற்கு சரியான முறையில் தண்ணீர் வரவில்லை என்று தெரிகிறது.
மேலும் சாக்கடை கால்வாயும் சுத்தம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகளும் அந்த கிராமத்தில் அமைத்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 கிராம மக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
மாட்டு வண்டிகளுடன் வந்து...
இந்த நிலையில் நேற்று முன்தினம் லிங்கதஹள்ளி, மல்லேனஹள்ளி கிராம மக்கள் சிலர் மாட்டு வண்டிகளில் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தரிகெரே டவுனை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதுபற்றி அறிந்த தரிகெரே டவுன் போலீசார் மாட்டு வண்டிகளில் வந்தவர்களை டவுனுக்கு வெளியே தடுத்து நிறுத்தினர்.
அப்போது கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த செல்கிறோம். இந்த போராட்டத்தால் யாருக்கும் தொந்தரவு ஏற்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தரிகெரே டவுனில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்ற கிராம மக்கள், அலுவலகம் முன்பு மாட்டு வண்டிகளை நிறுத்தி வைத்து நூதன போராட்டம் நடத்தினர். மேலும் அடிப்படை வசதிகள் கேட்டு கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த தாசில்தார் தாமோதர ராஜீவ்சிங் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தாசில்தாரிடம் மனு
இதையடுத்து போராட்டம் நடத்திய கிராம மக்கள் தாங்கள் வந்த மாட்டு வண்டிகளில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக தாசில்தாரிடம், கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தனர். இந்த போராட்டத்தால் தரிகெரே தாலுகா அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story