சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கினால் காங்கிரஸ் கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படும் எடியூரப்பா சொல்கிறார்
சுயேச்சை எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி வழங்கினால் காங் கிரஸ் கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படும் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கொப்பலில் நேற்று வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடி
பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு கடந்த 2007-ம் ஆண்டே சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த நிறுவனத்திற்கு நிலம் வழங்க வேண்டிய அவசியம் என்ன?. லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசு நிலத்தை வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். பா.ஜனதா எதிர்ப்பு குரல் எழுப்பியதை அடுத்து, ஜிந்தாலுக்கு வழங்கும் நிலத்தில் இரும்பு தாது எடுக்க அனுமதி இல்லை என்று மாநில அரசு சொல்கிறது.
நிலத்தை பெற்ற பிறகு அரசின் விதிமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்றுமா?. விவசாய கடன் தள்ளுபடி செய்யாதது, ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கும் நிலத்தில் முறைகேடு மற்றும் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தோல்வி ஆகிய மூன்று விஷயங்களை முன்வைத்து, வருகிற 13-ந் தேதி பெங்களூருவில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாநிலத்தில் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீருக்கு பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கிராம தரிசனம்
இந்த பிரச்சினைகளை நிர்வகிப்பதில் மாநில அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. வரிப்பணம் எங்கே செல்கிறது. குமாரசாமி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. குமாரசாமி சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளார். இது சரியல்ல. அரசு அதிகாரிகள் பணி இடமாற்ற முறைகேட்டில் குமாரசாமி ஈடுபட்டுள்ளார். சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று கூறிய நிகில் குமார சாமியின் கருத்தை நான் கண்டிக்கிறேன்.
தேர்தலை சந்திக்க யாரும் தயாராக இல்லை. உங்களால் முடிந்தால் ஆட்சி நிர்வாகத்தை நடத்துங்கள் இல்லாவிட்டால் வெளியேறுங்கள். கிராம தரிசனம் செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். இதை நான் எதிர்க்கிறேன். மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அந்த பகுதிகளுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை. மாவட்ட பொறுப்பு மந்திரிகளும் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்யவில்லை. இத்தகைய மோசமான சூழ்நிலையை கண்டு கண்ணீர் வருகிறது.
கூட்டணியில் குழப்பம்
காங்கிரசில் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் எப்போது என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எங்கள் கட்சியை சேர்ந்த கனககிரி தொகுதி எம்.எல்.ஏ. பசவராஜ் தடேசகூர் விலக மாட்டார். அது தொடர்பாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கினால், கூட்டணி அரசில் குழப்பம் ஏற்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story