மின்வாரியத்தில் பணி அமர்த்தப்பட்ட வெளிமாநிலத்தவர்கள் 2 ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்வாரிய அலுவலகங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ள வெளிமாநிலத்தவர்கள் 2 ஆண்டுகளில் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் தமிழக மின்வாரியத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த 36 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 2 ஆண்டுகளுக்குள் தமிழ் கட்டாயம் கற்று கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அவர்கள் பணியை இழக்க நேரிடும். இதுதான் சட்ட விதிமுறை ஆகும்.
தமிழகத்தில் கோடை காலத்தில் 16,500 மெகாவாட் மின்சாரம் தேவை என எதிர்பார்த்தோம். ஆனால் 16 ஆயிரத்து 100 மெகாவாட் மட்டுமே மின்சாரம் தேவைப்பட்டது.
கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள், மின்மாற்றிகள் பழுதாகின. இதனால் ஆங்காங்கே சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டது. இவற்றை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சரிசெய்து விட்டனர். ஆனால் எதிர்க்கட்சியினர் இதை தான் மின்வெட்டு என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை.
புதுச்சேரியில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அங்குள்ள ஆளும் கட்சியினரிடம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து கேளுங்கள். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மின்சாரத்துறை சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story