ஆட்சியை தக்க வைக்க குமாரசாமி நடவடிக்கை கர்நாடக மந்திரிசபை 12-ந் தேதி விரிவாக்கம் சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு பதவி


ஆட்சியை தக்க வைக்க குமாரசாமி நடவடிக்கை கர்நாடக மந்திரிசபை 12-ந் தேதி விரிவாக்கம் சுயேச்சைகள் உள்பட 3 பேருக்கு பதவி
x
தினத்தந்தி 9 Jun 2019 5:00 AM IST (Updated: 9 Jun 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியை தக்கவைக்க வருகிற 12-ந் தேதி கர்நாடக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி குமாரசாமி அதிரடி முடிவு எடுத்துள்ளார். அப்போது 2 சுயேச்சைகள் உள்பட 3 பேர் மந்திரியாக பதவி ஏற்க உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

ரமேஷ் ஜார்கிகோளி

குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆட்சி அமைத்தபோது, காங்கிரசுக்கு 22 மந்திரி பதவியும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 மந்திரி பதவியும் ஒதுக்கப்பட்டது. மந்திரியாக இருந்த சி.எஸ்.சிவள்ளி மரணம் அடைந்ததை அடுத்து காங்கிரசுக்கு ஒரு மந்திரி பதவி காலியாக உள்ளது. மேலும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 மந்திரி பதவி காலியாக உள்ளன. ஆகமொத்தம் மந்திரிசபையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. இதனால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, டாக்டர் சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மந்திரிசபை விரிவாக்கம்

இதனால் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி களத்தில் குதித்தனர். காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ரமேஷ் ஜார்கிகோளியை சமாதானப்படுத்த அவருக்கு மந்திரி பதவி வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்பது இதுவரை தெரியவில்லை.

இருப்பினும் ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார். காலியாக உள்ள 3 இடங்கள் நிரப்பப்படுகின்றன. 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கவுள்ளது. வருகிற 12-ந் தேதி காலை 11.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

ராமலிங்கரெட்டி

பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சங்கர், நாகேஸ் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.சி.பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, ராமலிங்கரெட்டி ஆகிய 3 பேரில் ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

இதற்கிடையே காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார்.

எனக்கு இழைக்கப்பட்ட அவமானம்

இதுகுறித்து பதிலளித்த காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மந்திரி பதவி வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ், பரமேஸ்வர் ஆகியோர் என்னிடம் கூறினர். அதை நான் ஏற்று அமைதியானேன். இந்த முறையும் எனக்கு பதவி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எனக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். இனி யாருடைய பேச்சையும் நம்பமாட் டேன். எனது ஆதரவாளர்களிடம் கலந்து பேசி உரிய முடிவு எடுப்பேன். எனக்கு ஏற்படும் அவமானங்களை பொறுத்துக்கொள்ள முடியாது“ என்றார்.

மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்னரும் காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்றும், இதனால் கூட்டணி ஆட்சிக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Next Story