தஞ்சை அருகே வெண்டயம்பட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சம் முறைகேடு ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு


தஞ்சை அருகே வெண்டயம்பட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சம் முறைகேடு ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Jun 2019 10:15 PM GMT (Updated: 8 Jun 2019 7:27 PM GMT)

தஞ்சை அருகே வெண்டயம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகளில் ரூ.50 லட்சம் முறைகேடு செய்ததாக ஆணையர் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி ஊராட்சியில் 2016-17-ம் ஆண்டில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் கீழ் வளர்ச்சிப்பணிகள் நடந்தது. இந்த பணிகளின் போது ரூ.50 லட்சம் முறைகேடு நடந்ததாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் இது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த முறைகேடுகள் குறித்து தஞ்சை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மணிகண்டன் விசாரணை நடத்தினார். விசாரணையில், வளர்ச்சிப்பணிகளின் போது பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரகுநாதன், மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் குமார் ஆகிய 4 பேரும் ரூ. 49 லட்சத்து 93 ஆயிரத்துக்கு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் திட்ட பணிகளுக்காக போலி பில் தயாரித்து கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பூதலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரகுநாதன், மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் குமார் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story