தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:00 PM GMT (Updated: 8 Jun 2019 7:40 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தமிழகத்தில் காவிரி டெல்டா மற்றும் கடற்கரை மாவட்டங்களில், விவசாய நிலப்பகுதிகளில் மழைநீரை சேமித்து பயிருக்கு தேவையான காலத்தில் பாசன நீரை பயன்படுத்தும் வகையில் 2-ம் கட்டமாக புதிதாக ரூ.82 கோடி மதிப்பில் பண்ணை குட்டைகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைநீரை பண்ணை குட்டைகள் அமைத்து அதில் சேமிப்பதன் மூலம், பயிருக்கு தேவையான காலங்களில் பாசனம் செய்து பயன்படுத்த முடியும். அதே சமயம் அந்த பகுதியில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பெற்று நிலத்தடி நீர்மட்டம் காக்கப்படுவதோடு கடல்நீர் உட்புகா வண்ணம் நிலத்தடி நீரின் பண்பும் காக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2018-19-ம் நிதியாண்டில் 139 பண்ணை குட்டைகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. 2-ம் கட்டமாக நடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 520 பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கம்ப்யூட்டர் பட்டா ஆகிய விவரங்களுடன் தங்கள் வட்டாரத்திற்கு உரிய வேளாண்மை பொறியியல் துறை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, எட்டயபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி என்ற முகவரியிலும்,

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, ஸ்டேட் வங்கி காலனி வடக்கு, ஆறுமுகச்சாமி காலனி அருகில், தூத்துக்குடி என்ற முகவரியிலும்,

திருச்செந்தூர், சாத்தான்கும், உடன்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, முத்து மாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் என்ற முகவரியிலும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story