இன்னும் ஒரு மாதத்தில் திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகம்


இன்னும் ஒரு மாதத்தில் திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகம்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் இன்னும் ஒரு மாதத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் வி.ராஜூ தெரிவித்தார்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனம் கடந்த நிதியாண்டில் பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது. இதற்கு காரணம், கட்டண குறைப்புதான். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாப்பது எனது தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் நிதி பற்றாக்குறை சரியாகி விடும் என்று நம்புகிறேன்.

இந்த நிதி பற்றாக்குறையையும் மீறி கடந்த நிதியாண்டில், தமிழ்நாடு வட்டம் இந்தியாவில் சாதனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதிகமான சிம்கார்டுகளை, அதாவது 9 லட்சத்து 55 ஆயிரம் சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்துள்ளது. இதுபோல தரைவழி தொலைபேசி இணைப்பில் 66 ஆயிரத்து 700 இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாதித்துள்ளது. லீஸ் சர்க்யூட் 5,600 வரை கொடுத்துள்ளோம்.

பி.எஸ்.என்.எல். செல்போன் 3ஜி சேவையில் இருந்து 4ஜி சேவையை, கடந்த மார்ச் மாதம் கோவை, சேலம் ஆகிய இடங்களில் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் உன்னத வரவேற்பை பெற்றுள்ளது.

வேகம் 20 எம்.பி.பி.எஸ். முதல் 30 எம்.பி.பி.எஸ். வரை இருப்பதால் 1 லட்சத்துக்கும் மேலான 4ஜி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். 4ஜி வேகத்தினை கண்டு கோவை மாவட்ட கலெக்டரே பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கஜா புயல் வந்தபோதும், ஒடிசா மாநிலத்தில் புயல் வந்தபோதும் பி.எஸ்.என்.எல். சேவை மட்டுமே தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது.

அடுத்த கட்டமாக 4ஜி சேவையை திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. பி.எஸ்.என்.எல். 3ஜி சிம்கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4ஜி சிம்கார்டுகளை இலவசமாக சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். புதிதாக 4ஜி சிம் பெறும் வாடிக்கையாளரிடம் அதற்காக குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். 4ஜி சிம்கார்டுகளை செல்போன்களில் போட்டு இயக்கும் வகையில் வாடிக்கையாளர்களும் 4ஜி ஸ்மார்ட் போன்களை வாங்கி வைத்திருக்க வேண்டும்.

4ஜி சிம்கார்டுகள் வாங்கிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் இன்னும் ஒரு மாதத்தில் 4ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். அடுத்ததாக வேலூர், திருப்பூரில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது. 4ஜி சேவையை அடுத்து 5ஜி சேவைக்கான தொழில்நுட்ப பணிக்கும் முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. அதற்காக செல்போன் கோபுரங்களில் சில மாற்றங்களை செய்திட வேண்டும்.

தொழில்நுட்பம் வளர, வளர மாற்றங்களும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஐ.டி., டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் வருங்காலத்தில் தனித்தனியாக செயல்படாது. ஒரே நிறுவனமே அனைத்து வேலையையும் செய்யக்கூடிய நிலை உள்ளது. அதாவது, இண்டர்நெட் புரோட்டக்கால்(ஐ.பி) ஆக மாற உள்ளது. சாப்ட்வேர், அப்ளிகேசன் இவைதான் எல்லா வேலைகளையும் செய்யும். இதனால், கடைநிலை ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பு குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story