உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
உதவி பேராசிரியர் தேர்வில் நடந்த் முறைகேடு பற்றி தேர்வு வாரியம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சங்கீதா ஸ்ரீராம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் மனித உரிமைகள் துறையில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி வெளியிட்டது.
இதன்படி, இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்தேன். எழுத்து தேர்விலும், நேர்முகத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்தேன். ஆனால், கடந்த மே 14-ந்தேதி தேர்ச்சிப் பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயர் இல்லை. இதையடுத்து நேர்முகத்தேர்வில் நான் பெற்ற மதிப்பெண் விவரங்களை வெளியிடும்படி முறையிட்டேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலர் என் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த தேர்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிப்படைத்தன்மையை பின்பற்றவில்லை. வேண்டப்பட்ட நபர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ஆசிரியர் தேர்வு வாரியம் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story