‘ஜாக்கி’ உதவியுடன் உயர்த்தப்பட்ட வீடு இடிந்து விழுந்தது 4 தொழிலாளர்கள் காயம்
‘ஜாக்கி’ உதவியுடன் உயர்த்தப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
செங்குன்றம்,
சென்னை கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கில்பர்ட். தொழில் அதிபர். இவருடைய மனைவி சுப்ரியா(வயது 30). இவர்கள், கொளத்தூரில் சொந்தமாக பிசியோதெரபி நிலையம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. தரைதளம், மாடியை கொண்ட அந்த வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தனர். தெருவில் இருந்து அந்த வீடு பள்ளமாக இருந்ததால் மழை காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும். இதனால் வாடகைக்கு வசித்தவர்கள் சிரமம் அடைந்தனர்.
15 அடி உயர்த்தப்பட்டது
இதையடுத்து வாடகைக்கு குடியிருந்தவர்களை காலி செய்துவிட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நவீன தொழில் நுட்ப உதவியுடன் ‘ஜாக்கி’ கொண்டு பள்ளத்தில் இருந்த அந்த வீட்டை சுமார் 15 அடி உயர்த்தி அமைத்தனர்.
அந்த பணிகள் முடிவடைந்ததும் வீட்டில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணியில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(வயது 35), கதிர்வேல்(60), அம்சவள்ளி(30) மற்றும் அந்தோணிசாமி(41) ஆகிய 4 பேர் கொரட்டூரில் குடிசை அமைத்து தங்கி, வேலை செய்து வந்தனர்.
இடிந்து விழுந்தது
நேற்று மாலை ஏழுமலை, கீழ் தளத்தில் உள்ள வீட்டின் குளியல் அறையில் சாரம் அமைத்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். மற்ற 3 பேரும் வீட்டின் உள்ளே பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுத்தியலால் கட்டிடத்தில் ஏழுமலை அடித்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பகுதி(போர்டிகோ) இடிந்து விழுந்தது.
இதில் 4 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செம்பியம் தீயணைப்பு வீரர்கள், 4 பேரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இவர்களில் படுகாயம் அடைந்த ஏழுமலை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story