பலத்த கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கடலோர பாதுகாப்பு படை படகுகள்
பலத்த கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கடலோர பாதுகாப்பு படையின் 2 படகுகள் மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு மீண்டும் கடல் வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடல் வழியாக ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கடலோர பாதுகாப்பு படையின் 2 நவீன படகுகள் சென்று கொண்டிருந்தன. மாமல்லபுரம் கடல் பகுதியில் பலத்த கடல்சீற்றம் ஏற்பட்டது.
அப்போது 2 படகுகளும் பலத்த ஒலி எழுப்பி கொண்டு மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரையில் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகளில் இருந்து இறங்கிய வீரர்கள் யாரும் அருகே வராதபடி படகுகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்தனர்.
சென்னை சென்றது
கடல் சீற்றம் தணிந்ததையடுத்து அந்த 2 படகுகளும் நேற்று காலை 7 மணி அளவில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றன. கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் அந்த 2 படகுகளிலும் பயணித்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து வந்த படகுகள் கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பிற்காக முகாமிட்டு விட்டு சென்னை செல்லும் போது பலத்த கடல் சீற்றத்தால் தற்காலிகமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டதாகவும், சீற்றம் தணிந்ததையடுத்து மீண்டும் படகுகள் சென்னை சென்றுள்ளதாகவும் கடலோர பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story