143-வது நினைவு தினம்: மெக்ஐவர் கல்லறையில் அஞ்சலி


143-வது நினைவு தினம்: மெக்ஐவர் கல்லறையில் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Jun 2019 4:30 AM IST (Updated: 9 Jun 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

மெக்ஐவரின் 143-வது நினைவு தினத்தையொட்டி அவரது கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊட்டி,

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் அவர்களது சிறந்த கோடை வாசஸ்தலமாக ஊட்டி நகரம் திகழ்ந்தது. இங்கிலாந்து நாட்டில் நிலவும் சீதோ‌‌ஷ்ண காலநிலை ஊட்டியிலும் நிலவியது. இங்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மெக்ஐவர் என்ற ஆங்கிலேயர் உருவாக்கினார். அவர் ஊட்டியில் தாவரவியல் பூங்கா அமைவதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

கடந்த 1848-ம் ஆண்டு பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. பூங்காவில் நடவு செய்வதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் அரிய வகை மரக்கன்றுகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே மெக்ஐவர் ஊட்டிக்கு கொண்டு வந்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட விதைகள், மலர் செடிகளை பூங்காவில் நட்டு வளர்த்தார்.

19 ஆண்டுகள் அயராத உழைப்புக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாக்கும் பணி கடந்த 1867-ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த பூங்காவை உருவாக்கியதில் மெக்ஐவரின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். ஊட்டியில் சில அண்டுகள் வாழ்ந்த அவர் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தார். அவரது உடல் ஊட்டியில் புனித ஸ்டீபன் ஆலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து புனித ஸ்டீபன் ஆலய குருவானவர் அருண் திலகம் பிரார்த்தனை செய்தார். இதில் உதவி இயக்குனர் ராதாகிரு‌‌ஷ்ணன், மூலிகை பண்ணை தலைவர் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story