பொங்கலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது; திருப்பூரை சேர்ந்த 5 பேர் மீட்பு


பொங்கலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் கிணற்றுக்குள் பாய்ந்தது; திருப்பூரை சேர்ந்த 5 பேர் மீட்பு
x
தினத்தந்தி 8 Jun 2019 10:45 PM GMT (Updated: 8 Jun 2019 9:53 PM GMT)

பொங்கலூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. அந்த காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பொங்கலூர்,

திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிப்பாளையம் டி.பி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன்(வயது 35). ஸ்டூடியோ உரிமையாளர். இவருடைய மனைவி கவிதா(30). இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சென்றாயனின் தங்கை சுதா(31), அவருடைய கணவர் தமிழ்செல்வன்(34), அவர்களது குழந்தைகள் நித்திஷ்(6), தர்‌ஷன்(2).

சென்றாயன், தனது மனைவி, தங்கை மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என மொத்தம் 5 பேருடன் ஒரு காரில் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். தமிழ்செல்வன் திருமணத்துக்கு வரவில்லை. அங்கு திருமணம் முடிந்த பிறகு அதே காரில் திருப்பூருக்கு அவர்கள் திரும்பி கொண்டு இருந்தனர். அந்த காரை சென்றாயன் ஓட்டி வந்தார்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் அந்த கார் தாராபுரம்–திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவில்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக கார் ஓடியது.

காரில் இருந்த அனைவரும் பயத்தில் அலறினார்கள். தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த 40 அடி ஆழம் கொண்ட புதர் மண்டிய கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றில் 5 அடி அளவுக்கே தண்ணீர் இருந்ததால் கார் தண்ணீரில் மூழ்கவில்லை.

40 அடி உயரத்தில் இருந்து கிணற்றுக்குள் கார், டமார் என்று விழுந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். புதர் மண்டிய கிணற்றுக்குள் ஒரு கார் விழுந்து கிடப்பதையும், காரில் இருந்தவர்கள் கதவை திறந்து அதன் மேல் நின்று கொண்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள என உரக்க சத்தம் போட்டதையும் பார்த்தனர்.

உடனே கிணற்றுக்குள் விழுந்தவர்களை காப்பாற்ற அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் லாரியில் இருந்த கயிற்றை எடுத்து கிணற்றுக்குள் வீசி காருக்குள் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த கயிறு போதுமானதாக இல்லை.

உடனே இது குறித்து அவினாசிலிங்கம்பாளையம் போலீசாருக்கும், பல்லடம் மற்றும் திருப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பல்லடத்தில் இருந்தும், திருப்பூரில் இருந்தும் தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது. அந்த கிரேனில் இருந்து மண் அள்ளப் பயன்படுத்தும் வட்டமான ரப்பர் கூடை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. கிரேனில் இருந்து ரோப்பை பிடித்தவாறு அவினாசிபாளையத்தை சேர்ந்த கோழிக்கடை ஆறுமுகம் என்பவர் கீழே இறங்கினார்.

அவர் கிணற்றுக்குள் காரின் மேல் நின்றிருந்தவர்களை ஒவ்வொருவராக கூடையில் ஏற்றி மேலே கொண்டு வந்தார். தீயணைப்பு வீரர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் சென்ற 5 பேரும் மீட்கப்பட்டனர். இதற்கிடையே விபத்து நடந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு இருந்தது. கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட 5 பேருக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்தில் கவிதா தோள்பட்டையில் காயம் அடைந்திருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கிணற்றுக்குள் விழுந்து நொறுங்கிய காரும் கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.


Next Story