விரார் கேளிக்கை விடுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி பலி


விரார் கேளிக்கை விடுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 9 Jun 2019 3:24 AM IST (Updated: 9 Jun 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

விரார் கேளிக்கை விடுதிக்கு சுற்றுலா சென்ற 7 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி பலி யானாள்.

மும்பை,

மும்பை மலாடு மால்வாணியை சேர்ந்த 22 பேர் பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் ஆபியா சேக் என்ற 7 வயது சிறுமியும் வந்திருந்தாள். இதில், சிறுமி நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது ஆர்வமிகுதியில், சிறுமி ஆபியா சேக் நீச்சல் குளத்தின் ஆழமான இடத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் அவள் மூழ்கினாள். அருகில் நின்று கொண்டிருந்த மற்ற சிறுமிகள் சத்தம் போட்டதால் அங்கிருந்தவர்கள் உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கிய சிறுமியை மீட்டனர்.

சிறுமி பலி

பின்னர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில், சிறுமி ஆபியா சேக் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அர்னாலா போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் குடும்பத்தினர் கேளிக்கை விடுதி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் சிறுமி நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story