குர்லாவில் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து முதியவர் சாவு மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் துயரம்
மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க மும்பை வந்திருந்தவர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
மும்பை,
புனேயை சேர்ந்தவர் தானாஜி லவங்கரே (வயது60). இவரது மகன் சுமித். இவருக்கு வருகிற 19-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, தானாஜி லவங்கரே மகனின் திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தார்.
நவிமும்பை ஐரோலியில் அவரது மகள் இருக்கிறார். தனது மகள் மற்றும் உறவி னர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக மும்பைக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இரவு 10.55 மணியளவில் அவர் குர்லாவுக்கு மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது அவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியதாக கூறப்படுகிறது. இதில், நிலைதடுமாறி விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் தானாஜி லவங்கரேயை மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் தானாஜி லவங்கரே ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story