ஷீல்டு மண் கால்வாயை கல் கால்வாயாக மாற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ஷீல்டு மண் கால்வாயை ஐகோர்ட்டு உத்தரவின்படி கல் கால்வாயாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா குறிச்சிப்பட்டி கண்மாயில் இருந்து ஷீல்டுகால்வாய் தொடங்கி சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிகிறது. இந்த கால்வாய் கடந்த 1925–ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இந்த கால்வாய் சுமார் 8 கிலோ மீட்டர் நீளமும், 30 அடி அகலமும் கொண்டதாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு கால்வாய் மூலம் பெரியாறு பாசனநீர் சுமார் 40 கண்மாய்களுக்கு வருகிறது. இதன் மூலம் கள்ளராதினிப்பட்டி, திருமலை, மேலப்பூங்குடி, சாலூர், திருமன்பட்டி, சோழபுரம் உள்பட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,748 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த ஷீல்டு கால்வாய் இன்று வரை மண் கால்வாயாகவே உள்ளது. இந்த கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக சீரமைக்கவில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்த கால்வாயில் மழைக்காலங்களில் தண்ணீர் திறந்துவிட்டாலும் அவை முறையாக இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு செல்வதில்லை.
இதன் காரணமாக கடந்த 7ஆண்டுகளாக இந்த பகுதியில் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் இந்த ஷீல்டு மண் கால்வாயை, கல் கால்வாயாக மாற்ற வேண்டும் என்று கடந்த 2016–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஷீல்டு கால்வாயை ஆய்வு செய்து சுமார் 3 கிலோ மீட்டர் அகலத்திற்கு கால்வாய் கட்ட ரூ.19கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரித்தனர். மேலும் இந்த கல் கால்வாய் கட்டுவதற்கான கருத்துரு சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த திட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பல மாதங்களாகியும் இந்த பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே இந்த ஷீல்டு மண்கால்வாயை கல் கால்வாயாக மாற்றும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.