மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்; அமைச்சர் பேட்டி
மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமேசுவரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி விரைவில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்தல் நடைமுறை காரணமாக கல்லூரி அமைக்கும் பணி சற்று தாமதமானது. ஆனால் உறுதியாக இந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாயல்குடி அருகே குதிரைமொழி என்ற இடத்தில் ரூ.600 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். மாவட்டம் முழுவதும் குடிநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் வழங்கப்படும்.
ராமநாதபுரம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எ டுத்து வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும். ராமநாதபுரம் அருகே ரூ.66 கோடி செலவில் அரசு சட்டக்கல்லூரிக்கான க ட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.