திருமங்கலம் அருகே விதிகளை மீறி மண் அள்ளுவதை கண்டித்து கிராம மக்கள் மறியல்


திருமங்கலம் அருகே விதிகளை மீறி மண் அள்ளுவதை கண்டித்து கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:45 PM GMT (Updated: 8 Jun 2019 10:41 PM GMT)

திருமங்கலம் அருகே மணல் கொள்ளையை கண்டித்தும், அதனை தடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் சுவாமி மல்லம்பட்டி. இங்கு கிராம மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைத்து அதனை அன்றாட தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை பயன்படுத்தி சிலர் சுவாமிமல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊருணியில் அதிக அளவு மண் அள்ளியுள்ளனர். இதனால் ஊருணியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அரசு அனுமதித்த அளவை காட்டிலும் அதிக அளவு ஆழம் தோண்டி விதிகள் மீறப்பட்டுள்ளதாக கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் ஊருணியில் நீராதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து அங்கு விதிகளை மீறி மண் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விதிகளை மீறி மண் அள்ளிய பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


Next Story