ஆசிரியர் தகுதி தேர்வு 2–ம் தாள் குமரி மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் எழுதினர்


ஆசிரியர் தகுதி தேர்வு 2–ம் தாள் குமரி மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் எழுதினர்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 3:15 PM GMT)

குமரி மாவட்டத்தில் நடந்த ஆசிரியர் தகுதிக்கான 2–ம் தாள் தேர்வை 14 ஆயிரம் பேர் எழுதினர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 474 பேர் எழுதினர். நேற்று 2–ம் தாள் தேர்வு நடந்தது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்கள் பள்ளி, கார்மல் மேல்நிலைப்பள்ளி, டதி மேல்நிலைப்பள்ளி, ஸ்காட் மெட்ரிக் பள்ளி, அல்போன்சா மெட்ரிக் பள்ளி உள்பட 38 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத 15 ஆயிரத்து 683 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் நேற்று  1,399 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஆசிரியர் தகுதிக்கான 2–ம் தாள் தேர்வை 14 ஆயிரத்து 284 பேர் எழுதினர்.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 76 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் ரோந்து வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு எழுதுபவர்கள் காலை 7 மணிக்கே மையங்களுக்கு வந்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது.

தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. சில பெண்கள் கைக்குழந்தையுடன் வந்தனர். அவர்கள் தேர்வுக்கு செல்லும் முன் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

Next Story