வந்தவாசி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது


வந்தவாசி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 10 Jun 2019 4:00 AM IST (Updated: 9 Jun 2019 9:17 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 10 பேர் உயிர் தப்பினர்.

வந்தவாசி, 

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (வயது 47). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை சென்னையில் இருந்து வந்தவாசி அருகே கோதண்டபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள தனக்கு சொந்தமான காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். காரை குமரன் ஓட்டினார்.

வந்தவாசி- காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசி அருகே உள்ள வெண்குன்றம் மலை எதிரே வந்தபோது ஆரணியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா செல்வதற்காக பிரகாஷ் (30) என்பவர் ஓட்டி வந்த கார் விளாங்காடு சாலையில் திரும்பிய போது அதன் மீது காஞ்சீபுரம் சாலையில் குமரன் ஓட்டி வந்த கார் நேருக்கு நேர் மோதியது.

இதில் குமரன் ஓட்டி வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் 2 கார்களிலும் இருந்த 10 பேர் உடனடியாக கார்களை விட்டு கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் அருகில் இருந்த காரில் தீப்பிடிக்காமல் தடுத்தனர்.

இதுபற்றி வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story