ஆத்தூர் அருகே பயங்கரம் மகனை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
ஆத்தூர் அருகே மகனை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீஸ் சரகம் பழையகாயல் அருகே உள்ளது ராமச்சந்திராபுரம் கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). இவருடைய மனைவி தங்கபேச்சி. இவர்களுக்கு 4 மகன்கள். மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் சட்டக்கல்லூரியிலும், 4-வது மகன் ஐ.டி.ஐ.யிலும் படித்து வருகிறார்கள். இதில் 3-வது மகன் முத்துராஜா (19). இவர் சிறுவயதில் இருந்தே மனவளர்ச்சி குன்றியவர் ஆவார். மேலும் 2 கால்களும் ஊனமான மாற்றுத்திறனாளி.
பெருமாள், தங்கபேச்சி ஆகியோர் உப்பளத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். தங்கபேச்சி தினமும் அதிகாலை 3 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு காலை 6.30 மணி அளவில் வீட்டிற்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தங்கபேச்சி வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் பெருமாள் தனது 3 மகன்களுடன் தூங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் வேலையை முடித்து விட்டு தங்கபேச்சி காலையில் வீட்டிற்கு வந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த பெருமாள், முத்துராஜாவை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்கு பின்னால் ஓலை குடிசை ஒன்று உள்ளது. அங்கு சென்று தங்கபேச்சி பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெருமாள், அவருடைய மகன் முத்துராஜா ஆகியோர் சேலையில் தூக்குப்போட்டு பிணங்களாக தொங்கினார்கள். இதை பார்த்த தங்கபேச்சி கதறி அழுதார்.
அவரது சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மற்ற மகன்களும், பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்களும் ஓடி வந்தனர். அவர்கள் 2 பேரும் பிணங்களாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மகன் முத்துராஜாவை கொன்று விட்டு பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முத்துராஜா மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் அவரை நினைத்து பெருமாள் மனவேதனையில் இருந்து வந்தார். தனது காலத்துக்கு பின்னர் தனது மகன் முத்துராஜாவை யார் பார்த்து கொள்வார்கள் என்று அடிக்கடி பெருமாள் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பெருமாள் நினைத்துள்ளார். அதன்படி மனைவி வேலைக்கு சென்றதும், பெருமாள் எழுந்து தன்னுடைய மகன் முத்துராஜாவை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள ஓலை குடிசைக்கு சென்றுள்ளார். அங்கு முதலில் முத்துராஜாவை தூக்கு மாட்டி கொன்றுவிட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆத்தூர் அருகே மகனை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story