கோவில்பட்டி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது; 15 பேர் காயம்
கோவில்பட்டி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்த 20 பேர் நேற்று காலையில் மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுடலை மணி (வயது 34) என்பவர் ஓட்டினார்.
வேன் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது. கோவில்பட்டி சாலைபுத்தூர் அருகே சென்ற போது, வேனின் முன்பக்க டயர் வெடித்து சாலை நடுவே அமைக்கப்பட்ட தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் சுடலைமணி, கலில் ரகுமான் (35), பாட்ஷா பீவி (58), ரபீஷா (53), சகாப்தீன் (60), பாத்திமா (60), பெனாஷிர் (30), மற்றொரு பாத்திமா (28) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலில் ரகுமான், பாட்ஷா பீவி ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story