நெல்லையில் புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை வழியாக சென்னை, கோவை, புதுச்சேரி, ஐதராபாத், திருப்பதி, வேலூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நெல்லையில் இருந்தும் முக்கிய ஊர்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வெளியூரில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே நின்று பயணிகளை ஏற்றி சென்றன. சமீபத்தில் சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது.
அதனால் ஆம்னி பஸ்கள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி சென்றன. இந்த நிலையில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அறிவிப்பு பலகை அந்த பகுதியில் வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை சில ஆம்னி பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றன. இதுகுறித்து தகவலறிந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இரவு 7 மணி அளவில் அந்த ஆம்னி பஸ் நிறுத்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. இந்த நிலம் தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இங்கு பஸ்களை நிறுத்தக்கூடாது. அதனால் ஆம்னி பஸ்களை எடுத்து செல்லுங்கள் என்று கூறினர். மாநகராட்சி அறிவிப்பு பலகையை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக ஒரு அறிவிப்பு பலகையை வைத்தனர். அதில் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட வில்லை. பின்னர் அதிகாரிகளும், வக்கீல்களும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, புதிதாக ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்ட இடம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த இடத்தில் நீதிமன்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுதான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் தொடர்பான நீதிமன்ற வழக்கு இருந்தால் என்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story