ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மோட்டார்சைக்கிளில் பிரசாரம் செய்த 50 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மோட்டார்சைக்கிளில் பிரசாரம் செய்த 50 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 6:44 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மோட்டார் சைக்கிளில் பிரசாரம் செய்த 50 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரடாச்சேரி,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. கொரடாச்சேரி ஒன்றியம் முகந்தனூரில் இருந்து 2 குழுக்களாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தினை நடத்தினர்.

கொரடாச்சேரி ஒன்றியம் முகந்தனூரில் விழிப்புணர்வு பிரசாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஒரு குழு முகந்தனூர், எண்கண், காப்பணாமங்கலம், திருக்கண்ணமங்கை, எட்டியலூர், அம்மையப்பன், தேவர்கண்டநல்லூர் வழியாக கமலாபுரம் சென்றது. இக்குழுவிற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் மணியன் தலைமை தாங்கினார்.

2-வது குழு முகந்தனூர், கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம், திட்டாணிமுட்டம், விடயபுரம், என பல்வேறு கிராமங்கள் வழியாக கமலாபுரம் சென்றது. இக்குழுவுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்த துண்டு பிரசுரம் மக்களிடம் வழங்கப்பட்டது.

ஊர்வலத்தில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் 2 குழுக்களும் இணைந்து கமலாபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பிரசார ஊர்வலம் நடத்தியதாக கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய சங்க தலைவர் தம்புசாமி உள்பட 50 பேர் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story