ஊத்துமலை அருகே மினி லாரி மோதி போலீஸ்காரர் பலி


ஊத்துமலை அருகே மினி லாரி மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2019 4:00 AM IST (Updated: 10 Jun 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துமலை அருகே பணி முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதி போலீஸ்காரர் பலியானார்.

ஆலங்குளம், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள செவ்வல்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 29). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து செவ்வல்பட்டிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவு 12 மணி அளவில் ஊத்துமலை அருகே உள்ள மருக்காலங்குளம் அருகில் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவர் தேவர்குளத்தை சேர்ந்த வேதமணி மகன் ஆனந்த் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story