சமூக வலைத்தளங்களில் தேவேகவுடா, குமாரசாமி பற்றி அவதூறு கருத்து பதிவு; 2 வாலிபர்கள் கைது


சமூக வலைத்தளங்களில் தேவேகவுடா, குமாரசாமி பற்றி அவதூறு கருத்து பதிவு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 Jun 2019 3:30 AM IST (Updated: 10 Jun 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் தேவேகவுடா, குமாரசாமி பற்றி அவதூறாக கருத்து பதிவு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன.

இந்த தேர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், ஜனதாதளம்(எஸ்) ஒரு தொகுதியிலும், ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம்(மே) 23-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. மேலும் 2 வாலிபர்கள் தேவேகவுடாவையும், குமாரசாமியையும் தகாத வார்த்தையில் திட்டி வீடியோ போட்டு இருந்தனர்.

இதுகுறித்து பெங்களூரு ஐகிரவுண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரை அவதூறு பேசியதுடன், சமூக வலைத்தளங்களில் அவர்களை பற்றி அவதூறு கருத்து பதிவு செய்ததாக

ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த சித்தராஜூ(வயது 29), அவரது நண்பர் சாமராஜூ(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story