சேலையூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்


சேலையூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

சேலையூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் காயம் அடைந்தனர்.

ஆலந்தூர்,

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அகரம்தென் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சாலையில் போலீசார் வைத்திருந்த இருப்பு தடுப்புகளை உடைத்து கொண்டு தாறுமாறாக வந்தது. அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பதுவஞ்சேரியை சேர்ந்த கிளரசன் கேன்வாஸ் பிரபு (வயது 18) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவருடன் வந்த விக்ரம் (18) என்பவரும் காயம் அடைந்தார். அதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மப்பேடு கலைஞர் நகர் முத்துமாரியம்மன் கோவிலைச் சேர்ந்த சாந்தி (40) என்பவருக்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சாந்தியின் கணவர் ஆறுமுகம் (43) லேசான காயங்களுடன் தப்பினார்.

உடனே அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

அதில் இருந்த கார் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில், காரை ஓட்டி வந்தவர் மதுவஞ்சேரியை சேர்ந்த வரதன் (50) என்பது தெரியவந்தது. விபத்துக்கு காரணமாக காரை பறிமுதல் செய்த போலீசார், வரதனை தேடி வருகிறார்கள். இதற்கிடையே காரை பள்ளி மாணவர் ஒருவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story