மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம்; கணவரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண், உடந்தையாக இருந்த தம்பியும் சிக்கினார்
பள்ளிப்பட்டு அருகே மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த அவரது தம்பியும் சிக்கினார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நொச்சிலி தலையாரி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
அந்த சமயங்களில் முனியம்மாளின் தம்பி ஏழுமலை (35) சமரசம் செய்து வைப்பது வழக்கம். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முருகேசன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து அவரை அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியம்மாள் தனது தம்பி ஏழுமலைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
உடனே ஏழுமலை தனது மனைவி ஷோபாவுடன் அங்கு சென்றார். முருகேசனுடன் அவர் வாக்குவாதம் செய்தார். அப்போது தகராறு முற்றியது. இந்த நிலையில் முருகேசன் தற்கொலை செய்துகொண்டதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு முனியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நொச்சிலி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதில் முருகேசன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து திருத்தணி போலீஸ் டி.எஸ்.பி. சேகர், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்–இன்ஸ்பெக்டர் மங்களபிரியா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முருகேசனின் மனைவி முனியம்மாள், அவரது தம்பி ஏழுமலை, மனைவி ஷோபா ஆகியோருடன் தனித்தனியாக விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக சேர்ந்து முருகேசனை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.