விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும்; இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் வனச்சரகம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் அளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு விலையுயர்ந்த மரங்களும், மூலிகை செடிகளும் காணப்படுகின்றன. அதேபோல் காட்டெருமை, யானை, சிறுத்தை, முயல், காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளும் வனப்பகுதியில் உள்ளன.
வனவிலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அவ்வப்போது தாதுஉப்பு கட்டிகள் வனத்துறை மூலம் வைக்கப்படுகின்றன. மேலும் வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் வனத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போது தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகாடு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதையடுத்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதற்கு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதால் விளைபயிர்கள் சேதமாவதோடு, சில நேரங்களில் வீடுகளையும் நாசப்படுத்தி விட்டு செல்கின்றன.
எனவே வனவிலங்குகள் ஊருக்குள் தண்ணீர் தேடி புகுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தாலும், அவைகளுக்கு முழுமையாக குடிநீர் கிடைக்கவில்லை. எனவே வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.