சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி சேதம்; விரைந்து சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்


சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி சேதம்; விரைந்து சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:00 AM IST (Updated: 10 Jun 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி சேதமடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கம்பம்,

முல்லைப்பெரியாறு அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் வழியாக லோயர்கேம்பை வந்தடைகிறது. பின்னர் அங்கு முல்லைப்பெரியாறாக உருவெடுத்து வைகை அணைக்கு தண்ணீர் செல்கிறது. மேலும் முல்லைப்பெரியாற்றில் சில பகுதிகளில் மதகுகள் அமைத்து அவற்றின் மூலம் கால்வாய்களுக்கு தண்ணீரை திருப்பி விட்டு விவசாய பாசனத்துக்கும் முல்லைப்பெரியாற்றின் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் கம்பம் சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்று பகுதியில் மதகுகள் அமைத்து அங்குள்ள கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தலை மதகில் இருந்து சீலையம்பட்டி வரையில் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த கால்வாய் செல்கிறது. அங்கிருந்து கால்வாய் இரண்டாக பிரிந்து பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயாக மாறுகிறது. இந்த கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த 2 கால்வாய்களுக்கு தண்ணீர் வரும் முக்கிய வழித்தடமான முல்லைப்பெரியாற்றின் கரைகளை பலப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. மேலும் தலைமதகுக்கு அருகே உள்ள சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்த போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மணப்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதி லேசாக சேதமடைந்தது. அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் அதன் பிறகு சீரமைப்பு பணிகளை அவர்கள் மேற்கொள்ளவே இல்லை. இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறையினரிடம் புகார் தெரிவித்தும் கரையை பலப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில் கரை பகுதி உடையும் நிலையில் இருப்பதால் அந்த வழியாக வாகனங்களை கொண்டு செல்ல முடியவில்லை. உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் கரைப்பகுதி முழுமையாக உடையும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றனர்.


Next Story