கரூர் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு


கரூர் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், புஞ்சைகடம்பங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யும் பொருட்டு ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டது. அதன்படி மேட்டுப் பாளையம் காவிரியாற்றில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, அதன் மூலம் தண்ணீரை குழாய் மூலம் ஆத்தூர் பூலாம்பாளையம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளுக்கு கொண்டு சென்று வினியோகிப்பது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை 6 மணியளவில் காவிரி ஆற்று பகுதியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விரைவில் இந்த பணிகளை முடித்து சீராக குடிநீர் வினியோகிப்பதற்கான பணிகளை முடித்திட வேண்டும், ஏற்கனவேயுள்ள குடிநீர்திட்டங்கள் மூலம் பெறப்பட்டு அனுப்பப்படும் குடிநீரானது அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறதா? என்பதை கண்காணித்து குடிநீர் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிற இடங்களுக்கும் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து காதப்பாறை ஊராட்சி பகுதியில் நிலவுகிற குடிநீர் பற்றாக்குறை குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் நன்னியூர் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் அதிகளவு பெறப்படும் குடிநீரை, காதப்பாறை பகுதிக்கு கொண்டு சென்று வினியோகிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கண்காணித்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் வாங்கல் காவிரியாற்றில் முன்பு வந்த வெள்ளத்தில் சேதமடைந்த குடிநீர் திட்ட கிணறுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுதா மகேஸ், உதவி நிர்வாக பொறியாளர்கள் பிரேம்நாத், அசோக்குமார், உதவி பொறியாளர் யோகராஜ் மற்றும் கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story