மடத்துக்குளம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை


மடத்துக்குளம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை
x
தினத்தந்தி 10 Jun 2019 3:30 AM IST (Updated: 10 Jun 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி வரை வெயில் சுட்டெரித்தது.அதன் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் அது பலத்த மழையாக உருவெடுத்தது.

குறிப்பாக மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், கொழுமம், கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, தூங்காவி, மெட்ராத்தி, வேடபட்டி, கழுகரை, ஜோத்தம்பட்டி. பாப்பான்குளம், சோழமாதேவி, சாமராயபட்டி, கண்ணாடிபுதூர், கிருஷ்ணாபுரம், மைவாடி, போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 4 மணி வரை பெய்தது.

இந்த மழையால் அப்பகுதியில் உள்ள குளங்கள்,ஏரிகள், கால்வாய்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மடத்துக்குளம் அக்ரஹாரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்து மழைநீரை பொதுமக்கள் வாளியில் இறைத்து வெளியேற்றினார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு 2 மணி நேரம் மழை பெய்ததால் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேடபட்டி-ஜோத்தம்பட்டி செல்லும் சாலையில் ஓரமாக வளர்ந்து இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் பயணம் செய்வோர் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் மாற்று பாதையிலும் ஒத்தையடி பாதையிலும் சென்றனர். இதையடுத்து அந்த மரத்தை ஊராட்சி பணியாளர்கள் வெட்டி அப்புறபடு்த்தினார்கள்.

Next Story