உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்


உயர்அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
x
தினத்தந்தி 9 Jun 2019 11:15 PM GMT (Updated: 9 Jun 2019 8:41 PM GMT)

வெள்ளகோவில் அருகே உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுக்க சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் பகுதியில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெள்ளக்கோவில் வேலப்பநாய்க்கன்வலசைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவருடைய பூமியில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதை கண்டித்து விவசாயி சக்திவேல் மற்றும் சென்னிமலையைச் சேர்ந்த தமிழ்நாடு தற்சார்பு இயக்க நிறுவனர் பொன்னையன் தலைமையில், சுமார் 40 விவசாயிகள் மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த அங்கு சென்றனர்.

இது பற்றிய தகவல் அறிந்துதம் காங்கேயம் தாசி்ல்தார் விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை தடுத்துநிறுத்தினார்கள். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விவசாயி சக்திவேல் தனது நிலத்தில் மின்கோபுரம் அமைக்க ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்டு இருப்பதாக தாசில்தார் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.

ஆனால் விவசாயி சக்திவேல் கூறும்போது அதிகாரிகள் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டதாக தெரிவித்தார். ஆனாலும் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Next Story