கன்னியாகுமரியில் பரபரப்பு விஷம் குடித்து விட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி


கன்னியாகுமரியில் பரபரப்பு விஷம் குடித்து விட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 10 Jun 2019 3:45 AM IST (Updated: 10 Jun 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

மதுரை ஆரப்பாளையம் சுடுதண்ணி வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. இவருடைய மகன் வெங்கடேசன்(வயது 27), எம்.பி.ஏ. பட்டதாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர்களை கண்டித்ததுடன், சந்திப்பதற்கும் தடை விதித்தனர். இதனால் காதல் ஜோடி மனமுடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

மாணவி திடீரென மாயமானதை அறிந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மகளை கண்டு பிடிக்க முடியாததால், மதுரை கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை காதலர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர், இரவு கடற்கரையில் தனிமையில் அமர்ந்து பேசினார்கள். அப்போது, இனி ஊருக்குச் சென்றால் தங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்று பயந்தனர். இதனால், இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை காதல் ஜோடி குடித்தனர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து இரவு 11.45 மணி அளவில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி கன்னியாகுமரி வந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்ததாக கூறினார்கள்.

அதே சமயம் காதலன் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story