ஆலப்பட்டி அருகே மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


ஆலப்பட்டி அருகே மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஆலப்பட்டி அருகே உள்ள மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி அருகே உள்ள பொம்மலப்பன் மலையின் தெற்கு பகுதியில் கிரு‌‌ஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குழுவினரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் வழி நடத்தினார்கள்.

இது குறித்து ஆய்வு குழுவினர் கூறியதாவது:-

மனித வரலாற்றில் எழுத்துக்கள் கண்டறிவதற்கு முன் அவன் தன்னுடைய எண்ணங்களையும், தன் வாழ்க்கை கலாசாரத்தையும் தெரிவிக்க கையாண்ட வழிகளில் ஒன்று தான் பாறை ஓவியங்கள் ஆகும். தற்போது நடந்த இந்த ஆய்வின் போது அங்கு இரண்டு பாறைகளில் கவி போன்ற அமைப்பில், இரண்டு பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முதல் தொகுதியில் 40-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. ஒரு ஓவியம் காவடி தூக்கியவாறு அமைந்துள்ளது. இதில் ஒரு ஆண் வில் கொண்டு வேட்டை யாடுவது காட்டப்பட்டுள்ளது. அதேபோல் அக்காலத்தில் பெண்களும் வேட்டைக்கு சென்றதற்கான அடையாளமாக வில் கொண்டு வேட்டையாடுவது போல் பெண் உருவம் காட்டப்பட்டுள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகள்

மேலும் ஒருவர் புலி வேடமிட்டும் காணப்படுகிறது. 2-வது தொகுதியில் ஒரு வீரன் வில் வைத்து வேட்டையாடுவது போல ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவன் ஒரு தலைவனாக இருந்திருக்க கூடும். அதற்கு அடையாளமாக அவனது தலையின் மேல் கிரீடம் போன்ற ஒரு அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். இந்த மலையின் அருகில் உள்ள மலைகளிலும் பாறை ஓவிய தொகுதிகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த ஆய்வு குழுவில் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், டேவீஸ், மதியழகன், மதிவாணன், ரவி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story