மாவட்டத்தில் 2-வது நாளாக ஆசிரியர் தகுதித்தேர்வு 19,919 பேர் எழுதினர்


மாவட்டத்தில் 2-வது நாளாக ஆசிரியர் தகுதித்தேர்வு 19,919 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:15 AM IST (Updated: 10 Jun 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 19 ஆயிரத்து 919 பேர் எழுதினர்.

சேலம்,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றைய தினம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 19 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு நடைபெற்றது. 7 ஆயிரத்து 236 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 991 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இரண்டாம் தாள்

இதைத்தொடர்ந்து நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாள் எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 168 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்காக 53 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் நேற்று நடந்த 2-ம் தாளில் 19 ஆயிரத்து 919 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 249 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களுக்குள் மடிக்கணினி, தண்ணீர் பாட்டில், வாட்ச், கைக்குட்டை, செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து செல்ல தேர்வுத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மதியம் 1 மணிக்கு முடிந்தது.

Next Story