ராமேசுவரத்தில் ரூ.7 கோடியில் புதிய சாலை பணிகள்; அமைச்சர் தொடங்கி வைத்தார்
ராமேசுவரத்தில் ரூ.7 கோடியில் புதிய சாலை பணிகளை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் சுற்றுலா நிதியின் மூலம் ரூ.7 கோடியில் புதிய சாலை பணிகளை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். கரையூர்–வேர்க்கோடுசாலை, சம்பை–மாங்காடு, சாலை பணிகளையும் மற்றும் பர்வதம் செல்லும் சாலை பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், நகராட்சி பொறியாளர் அய்யனார், அ.தி.மு.க.கட்சியின் நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுனன், நகர் அவை தலைவர் குணேசேகரன், கட்சி நிர்வாகிகள் தஞ்சிசுரேஷ், மகேந்திரன், முனியசாமி, சீமான்மரைக்காயர், மாங்குடி செந்தூரான் உள்பட ஏராளமனோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:–
ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சுற்றுலா நிதி மூலம் ரூ.7 கோடியில் புதிதாக சாலை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. ஏற்கனவே சுற்றுலா துறை மூலம் ரூ.5 கோடியில் பல பணிகள் முடிவடைந்துள்ளன.மேலும் ரூ.10 கோடி நிதியில் பல பணிகள் நடைபெறவுள்ளன. மதுரையில் அ.தி.மு.க. கட்சியின் மூத்த நிர்வாகியும்,சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா கூறியுள்ளது அவருடைய தனிப்பட்ட கருத்து.அதைப்பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
அ.தி.மு.க.கட்சியை பொறுத்தவரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு கண்கள்.இதில் ஒரு கண்ணில் வெண்ணெய்யும்,ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.அ.தி.மு.க.கட்சியில் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை.பொதுக்குழு கூடி எந்த முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன்.
தமிழகத்தில் அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்களே விரும்பி 9 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்திருக்கிறார்கள். ராமேசுவரத்தில் இந்த ஆண்டிலேயே அப்துல்கலாம் பெயரில் அரசு கலைக்கல்லூரி செயல்படும்.கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தற்காலிகமாக கல்லூரி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.அந்த ஆய்வு முழுமையாக முடிந்த பின்பு விரைவில் அரசுகலைக்கல்லூரி செயல்பட தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.