பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க கோரி மதுரைக்கு நடைப்பயணம் செல்ல 50 கிராம மக்கள் முடிவு
மேலூர் அருகே பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க கோரி போராட்டம் நடத்துவது, மதுரைக்கு நடைப்பயணம் செல்வது என்று 50 கிராம மக்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலூர்,
மேலூர் தாலுகா பகுதி முல்லைப் பெரியாறு–வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதியாகும். மேலூர் தாலுகா பகுதியில் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பெரியாறு–வைகை பாசன கால்வாய் பயணிக்கும் நிலையில் சேக்கிப்பட்டியை மையமாக கொண்டு 16 ஊராட்சிக்கு உட்பட்ட 50–க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்றளவும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. அருகிலுள்ள மேலவளவு பகுதி வரை பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் கிடைக்கிறது. இதேபோல் சேக்கிப்பட்டி அருகே உள்ள 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நீட்டிப்பு கால்வாய் அமைத்து பாசன வசதி அமைத்து அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து சேக்கிப்பட்டியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று வாட்ஸ்–அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.
இந்தநிலையில் அந்த தகவலின் அடிப்படையில் நேற்று பாசன கால்வாயை நீட்டிக்க வலியுறுத்தி 50–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், கிராம மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தனர். இதுதொடர்பாக தீர்மானங்களும் வாசித்து நிறைவேற்றினர். மேலும் பாசன கால்வாய் வேண்டி முதல்–அமைச்சருக்கு மனு எழுதும் கவன ஈர்ப்பு போராட்டம், சேக்கிப்பட்டியில் இருந்து நடைப்பயணமாக மதுரைக்கு சென்று கலெக்டரிடம் மனு அளித்து கோரிக்கையை முன்வைத்தல் உள்ளிட்டவை நடத்தப்போவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம மக்கள் கூறும்போது, வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த பகுதிக்கு பெரியாறு கால்வாயை நீட்டித்து பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.