விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் வேலூரில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய வக்கீல்கள், கோர்ட்டு அமீனா சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் சுகுமார். கூட்டுறவுத்துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு வேலூரில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதைத்தொடர்ந்து அவருடைய மகன் பிரசன்னகுமார், மகள் பிரியங்கா ஆகியோர் ரூ.1½ கோடி இழப்பீடு கேட்டு வேலூர் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் சுகுமார் குடும்பத்துக்கு ரூ.22 லட்சத்து 15 ஆயிரம் இழப்பீடாக 3 மாதங்களுக்குள் வழங்க 5.1.2018 அன்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை.
அதைத்தொடர்ந்து மீண்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்து வட்டியுடன் சேர்த்து ரூ.34 லட்சத்து 56 ஆயிரம் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அப்போதும் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய 6.3.2019 அன்று உத்தரவிடப்பட்டது. அதன்படி வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு அமீனா ஆகியோர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய 2 முறை சென்றனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் கால அவகாசம் கேட்டனர். இதனால் ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனம் கேட்ட காலக்கெடு முடிந்தும் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் நேற்று வக்கீல்கள் செல்வராஜ், லலித்குமார், கோர்ட்டு அமீனா நேர்மைநம்பி ஆகியோர் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய சென்றனர்.
அவர்களிடம், இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் அலுவலகத்தை ஜப்தி செய்யாமல் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story