பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி கழிவறைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியிடம் வாலிபர் கலாட்டா


பள்ளிபாளையம் அரசு மகளிர் பள்ளி கழிவறைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவியிடம் வாலிபர் கலாட்டா
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறையில் 10-ம் வகுப்பு மாணவியிடம் ஒரு வாலிபர் கலாட்டா செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்களும், பொதுமக்களும் ஆவேசம் அடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

பள்ளிபாளையம், 

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடந்த 7-ந்தேதி பள்ளியில் உள்ள கழிவறைக்கு 10-ம் வகுப்பு மாணவி சென்றார். அப்போது திடீரென அங்கு ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் அங்கு நின்ற மாணவியிடம் அந்த வாலிபர் கலாட்டா செய்தார். இதில் மாணவி அணிந்திருந்த மேல்சட்டை கிழிந்தது. இதனால் அதிர்்ச்சி அடைந்த அந்த மாணவி அலறியடித்துக்கொண்டு கழிவறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் அந்த மாணவி கூறினார். இதையடுத்து தலைமை ஆசிரியை சரஸ்வதி பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி கழிவறையில் புகுந்து மாணவியிடம் கலாட்டா செய்த வாலிபர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆவேசமடைந்து நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, நகராட்சி முன்னாள் தலைவர்கள் வெள்ளிங்கிரி, குமார், முன்னாள் துணை தலைவர்கள் சுப்பிரமணியம், ரவி மற்றும் பலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது தினசரி காலை, மாலை நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பள்ளி கழிவறை காம்பவுண்டு சுவரை உயர்்த்தி கட்ட வேண்டும், என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி கூறும்போது, பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி கூறும்போது, கழிவறையில் புகுந்த வாலிபரை விரைவில் கைது செய்வோம், என்றார்.

Next Story