ஊத்தங்கரை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்


ஊத்தங்கரை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.3½ லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ளது மகனூர்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள காவேரி கொட்டாய் என்ற இடத்தில் காரில் 2 பேர் செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்திய போது அதில் இருந்து இறங்கி 2 பேர் தப்பி ஓடினர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 360 கிலோ எடை கொண்ட 9 செம்மரக்கட்டைகள் இருந்ததும், அவற்றை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 9 செம்மரக்கட்டைகள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தியதாக சிங்காரப்பேட்டை காவேரிகொட்டாய் பகுதியை சேர்ந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.3½ லட்சம் ஆகும். இது தொடர்பாக தப்பி ஓடிய மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story