ஓசூர் அருகே ஏரியில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் தேடும் பணி தீவிரம்


ஓசூர் அருகே ஏரியில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியர் தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கிய தனியார் நிறுவன ஊழியரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளி பாரதியார் நகரை சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் சபரிநாதன் (வயது 20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று தனது நண்பர் ஒருவருடன் சபரிநாதன் அப்பகுதியில் உள்ள பேகேபள்ளி ஏரிக்கு குளிக்க சென்றார். சபரிநாதனுக்கு நீச்சல் தெரியாததால் தெர்மாகோலை பிடித்தபடி விளையாடி குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதில் அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைப் பார்த்து அவருடைய நண்பர் அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ஏரியில் இறங்கி சபரிநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சபரிநாதன் ஏரியில் மூழ்கிய தகவல் அறிந்த அவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் ஏரிக்கு திரண்டு வந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும், கிராம மக்களும், தீயணைப்பு வீரர்களும் 3 மணி நேரம் சபரிநாதனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வாலிபரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) வாலிபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story