பஸ் மீது மோதி, பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி 15 பேர் படுகாயம்
ஓசூர் அருகே பஸ் மீது மோதி பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் மொத்தம், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சுண்டகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை, 4 மணிக்கு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புசுவரில்(சென்டர் மீடியன்) மோதியது. இதில் பஸ்சின் முன்புற டயர்கள் கழன்றன. ஆனால் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர் சுண்டகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பயணிகள் நிற்பதையும், பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி நிற்பதையும் கண்டு பஸ்சின் வேகத்தை குறைத்தார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று சேலம் நோக்கி சென்ற பஸ்சின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் பஸ்சின் மீது மோதிய லாரி தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சிற்காக காத்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அருகே உள்ள அகரம்பள்ளியை சேர்ந்த கமால்பாஷா என்பவரின் மனைவி சையத் அனிசா (வயது 32), அவரது மகன் முகமது சுகைல் (14), மகள் மைத்துனிஷா என்ற பாப்பனிஷா (10) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
கமால்பாஷா மற்றும் அவரது மகன் நிசார் (8), கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த சுதா (38), அவரது மகன்கள் விஷ்ணு (14), சரண் (12), சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையை சேர்ந்த செல்லப்பன் (34), சங்ககிரி ரஞ்சித்குமார் (40), கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை கிருஷ்ணமூர்த்தி (38), பஸ் கண்டக்டர் தமிழரசன் (55), போச்சம்பள்ளியை சேர்ந்த டிரைவர் சந்திரசேகர் (40), லாரி டிரைவரான கிருஷ்ணகிரி துடுக்கனஹள்ளி அர்ஜூனன் (32) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான 2 பஸ்கள், ஒரு லாரி ஆகியவற்றை போலீசார் அங்கிருந்து கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் அருகே பயணிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story