பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க ஏற்பாடு; சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை


பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க ஏற்பாடு; சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 7:55 PM GMT)

சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஊத்துக்கோட்டை,

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் பெற சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவது வழக்கம்.

ஆனால் பருவமழை பொய்த்து போனதாலும், கோடை வெயில் காரணமாகவும் இந்த ஏரிகள் வறண்டு விட்டன. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதுதவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும், கல்குவாரி தண்ணீரும் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

ரெயில் மூலமாக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுதவிர பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்தும் தண்ணீர் பெற சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

அதன்பேரில் மோவூர், காந்திநகர், புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற குழாய்கள் அமைக்கும் பணி இரவுபகலாக நடந்து வருகிறது. இப்பணிகள் 5 நாட்களில் முடிக்கப்பட்டு குழாய்கள் மூலம் செங்குன்றத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் கிடைத்தால் சென்னையில் ஓரளவு குடிநீர் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story