பள்ளி அருகே முட்புதரில் தீ வகுப்பறைக்குள் புகை சூழ்ந்ததால் மாணவ– மாணவிகள் அலறியடித்து ஓட்டம்


பள்ளி அருகே முட்புதரில் தீ வகுப்பறைக்குள் புகை சூழ்ந்ததால் மாணவ– மாணவிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 7:55 PM GMT)

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில் பள்ளி அருகே உள்ள முட்புதரில் ஏற்பட்ட தீவிபத்தால் வகுப்பறைக்குள் புகை சூழ்ந்தது. இதனால் மாணவ–மாணவிகள் அலறியடித்து ஓடினர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே சுமார் ஒரு ஏக்கருக்கு மேலான தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த காலி இடத்தில் காய்ந்துபோன செடிகளும், மரங்களும் அதிக அளவில் இருந்தது.

மேலும் இந்த இடத்தில் ஏராளமான குப்பைகளும் சிதறிய நிலையில் கிடந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் காலி இடத்தில் இருந்த செடிகள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ மளமளவென செடி, கொடிகள், காய்ந்த மரங்கள் முழுவதும் பரவி பயங்கரமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் இருந்த தனியார் பள்ளி சுற்றுச்சுவர் மீது பரவத்தொடங்கியது. அந்த இடம் முழுவதும் கரும்புகை எழும்பியது.

இந்த கரும்புகை அருகிலுள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு சென்றதால் மாணவ–மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவ–மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியது.

இந்த தகவல் மற்ற வகுப்பு அறையில் இருந்த மாணவர்களுக்கும் பரவியதால் ஒரே நேரத்தில் பள்ளியில் இருந்த மாணவ–மாணவிகள் அனைவரும் அலறி அடித்து கொண்டு மண்ணிவாக்கம் முடிச்சூர் சாலையை நோக்கி ஓடிவந்தனர்.

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

ஒரே நேரத்தில் பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேறி மண்ணிவாக்கம் முடிச்சூர் சாலைக்கு ஓடி வந்ததால் மண்ணிவாக்கம் முடிச்சூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தியதில், காலி இடத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரிலிருந்து தீப்பொறி காய்ந்த செடி, மரங்களின் மீது விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.


Next Story