கூடலூரில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
கூடலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில் தாசில்தார் ரவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தருமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று மாலை 5 மணிக்கு கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் ரோந்து சென்றனர்.
பின்னர் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டைகளில் பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் நடராஜன் (வயது 59) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து கூடலூர் நகரில் உள்ள கடைகளில் மறைமுகமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த மூட்டைகளில் போதை தரும் பாக்குகள் 5,950-ம், புகையிலை பாக்கெட்டுகள் 4,050-ம் மொத்தம் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் இருந்தது. இதனை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். இதனால் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பாக்கெட்டுகள் ஒப்படைக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story