ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மாணவி பலி


ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து மாணவி பலி
x
தினத்தந்தி 11 Jun 2019 4:00 AM IST (Updated: 11 Jun 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து 10-ம் வகுப்பு மாணவி இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பெரியப்பா கண் எதிரே அந்த மாணவி பரிதாபமாக பலியானார்.

ஆத்தூர், 

ஆத்தூர் அருகே உள்ள கடம்பூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மகள் பவன்யா (வயது 14) ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

சின்னசாமியின் அண்ணன் நாகராஜ், ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரம் அரசு உயர்நிைலப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலையில் இவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு செல்லும் வழியில் அவர், தனது தம்பி மகள் பவன்யாவை அவள் படிக்கும் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட சென்றார்.

ஆத்தூரில் இருந்து பைத்தூர் செல்லும் சாலையில் குடகு என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அந்த வழியில் எதிரே நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை நாகராஜன் திருப்பினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மாணவி பவன்யா தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி பவன்யா ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அந்த மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த மாணவியின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story