வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2018–19ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
தாலுகா செயலாளர் தோட்டாமங்கலம் ராசு, தாலுகா பொருளாளர் ராமநாதன், துணை தலைவர்கள் போஸ், முருகன், துணை செயலாளர்கள் சந்தானம், சகாதேவன், சோனைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணி, மாநில துணை தலைவர் முத்துராமு, மாவட்ட துணை தலைவர் சேதுராமன் ஆகியோர் பேசினர்.
இதில் 2018–19–ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் 2018–19–ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
நடப்பாண்டில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் முறையான குடிநீர் வினியோகம் கிடைக்கவும், கண்மாய் கால்வாய் போன்ற நீர் நிலைகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.