கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கோடை காலத்தில் கடுமையான வெயிலினால் ஆறு,குளங்கள் வறண்டன. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 1 அடியானதால் கோவை நகருக்கு குடிநீர் வினியோகம் குறைந்தது.
இந்தநிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதனால் கோவை உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சி மைய தலைவர் சுப.ராமநாதன் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டு கால கணக்கெடுப்பின்படி கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 210 மில்லி மீட்டர் தென்மேற்கு பருவமழை பெய்யும்.இந்த ஆண்டும் சராசரியான மழை பெய்யும்.கோடை காலத்தின்போது சராசரியாக 136 மில்லி மீட்டர் மழை பெய்யும். இந்த ஆண்டு 35 மில்லி மீட்டர் மழை குறைந்து 101 மில்லி மீட்டர் மட்டுமே பெய்தது.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆறு, குளங்களில் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொள்ளாச்சி வட்டாரத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான நஞ்சநாடு, எமரால்டு, போர்த்தி உள்ளிட்ட இடங்களில் நேற்று சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. தோட்ட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுங்குளிர் காரணமாக வெம்மை ஆடைகளை அணிகின்றனர். ஊட்டியில் பகலில் சாரல் மழை பெய்ததால், தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி பூங்காவை கண்டு ரசித்தனர்.
தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தால், நீலகிரியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்கும். கூடலூர், எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்ய தேவையான நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மழை அதிகரிக்கும் போது, முக்கூருத்தி, அப்பர்பவானி போன்ற பகுதிகளில் பெய்தால் மழைநீர் குந்தா, பைக்காரா மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பவானிசாகர் அணைக்கும், நடுவட்டம் பெய்யும் மழைநீர் மாயார் ஆறு வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கும் செல்கிறது. கூடலூரில் பெய்யும் மழை பாண்டியாறு-புன்னம்புழா ஆறு வழியாக கேரளாவுக்கு செல்லும்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
நடுவட்டம்-4, அவலாஞ்சி-3, கிண்ணக்கொரை-12, அப்பர்பவானி-24, குன்னூர்-1, கூடலூர்-5, தேவாலா-7.
Related Tags :
Next Story